தமிழக செய்திகள்

கடன் - முறைகேடுகளில் சிக்கி தவிப்பு: இருளில் மூழ்கிய மின் துறைக்கு வெளிச்சம் கிடைக்குமா?

தி.மு.க. ஆட்சியில் (2021-2026) மின்சார வாரியத்தின் வருவாய் ரூ.4,97,996 கோடியாகவும், செலவு ரூ.5,32,443 கோடியாகவும் அதிகரித்தது.

சென்னை,

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, கடந்த 16-ந் தேதி, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட இந்த வெள்ளை அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடி என்று கூறப்பட்டு இருந்தது.

குறிப்பாக, மின் துறையின் மொத்த நிலுவைக் கடன் மட்டும் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடனான ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 176 கோடியை வைத்து கணக்கிடும்போது, மின் துறையின் கடன் அளவு 77.6 சதவீதம் ஆகும்.

'ஷாக்' அடித்த மின் துறை வெள்ளை அறிக்கை

இந்த நிலையில், மின் துறைக்கு என தனியாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அத்துறையின் அமைச்சர் நிர்மல் குமார் கூறியிருந்தார். அதன்படி, கடந்த 25-ந் தேதி மின் துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை அவர் வெளியிட்டார்.

மின் துறை வெள்ளை அறிக்கையில், 'ஷாக்' அடிக்கும் வகையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றிருந்தன. கடந்த 2001-2006-ம் ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார வாரியத்தின் வரவு ரூ.59,084 கோடியாகவும், செலவு ரூ.67,439 கோடியாகவும், பற்றாக்குறை ரூ.8,355 கோடியாகவும் இருந்திருக்கிறது.

பற்றாக்குறை அதிகரிப்பு

அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில் (2006-2011) வருவாய் ரூ.92,737 கோடியாக அதிகரித்த நேரத்தில், செலவும் ரூ.1,28,200 கோடியாக அதிரடியாக உயர்ந்தது. இதனால், பற்றாக்குறையும் ரூ.35,463 கோடியாக அதிகரித்தது.

தொடர்ந்து வந்த அ.தி.மு.க. ஆட்சியில் (2011-2016) மின்சார வாரியத்தின் வருவாய் ரூ.1 லட்சம் கோடி உயர்ந்து, ரூ.1,92,971 கோடியாக இருந்த நிலையில், செலவும் இரட்டிப்பு ஆனதுபோல், ரூ.2,49,332 கோடியாக எகிறியது. பற்றாக்குறையும் ரூ.56,361 கோடியாக அதிகரித்தது.

வருவாய், செலவு உயர்வு

மீண்டும் ஆட்சி அமைத்த அ.தி.மு.க. அரசில் (2016-2021) வருவாய் ரூ.3,20,140 கோடியாகவும், செலவு ரூ.3,78,674 கோடியாகவும் உயர்ந்தது. இதனால், பற்றாக்குறை ரூ.58,534 கோடி என்ற அளவில் இருந்தது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் (2021-2026) மின்சார வாரியத்தின் வருவாய் ரூ.4,97,996 கோடியாகவும், செலவு ரூ.5,32,443 கோடியாகவும் அதிகரித்தது. அதே நேரத்தில், பற்றாக்குறை ரூ.34,447 கோடியாக குறைக்கப்பட்டது.

ரூ.58 ஆயிரம் கோடி முறைகேடு

என்றாலும், மின்சார வாரியத்திற்கு கடன் ரூ.2,47,130 கோடியாக உள்ளது. குறிப்பாக, 2020-2021-ம் ஆண்டில் மட்டும் மின் கொள்முதலில் ரூ.58 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் துறையில் காலிப் பணியிடங்கள் 65,921 என்ற அளவில் இருக்கும் நிலையில், கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் 9,136 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், புதிதாக 343 பேர் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஊழியர்களுக்கும் 6 மாதங்களாக ஊதியமும் வழங்கப்படாமல் உள்ளது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில், மின்சார வாரியம் இருளில் தவித்துக் கொண்டிருக்கிறது.

மீண்டு எழ வழியிருக்கிறதா?

தமிழ்நாட்டிற்கு தினமும் 21,307 மெகாவாட் மின்சாரம் தேவையாக உள்ளது. ஆனால், தமிழக அரசால் 4,332 மெகாவாட் அளவுக்கே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, மொத்த தேவையில் 20 சதவீதமே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள மின்சாரம் மத்திய அரசின் தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதுவும் தனியாரிடம் ரூ.6.21 மதிப்புள்ள ஒரு யூனிட் மின்சாரம் ரூ.21-க்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற முறைகேடுகளால்தான் மின்சாரம் வாரியம் கடனில் மூழ்கிப் போய் உள்ளதாக கூறப்படுகிறது. இனி, மீண்டு எழ வழியிருக்கிறதா? என்று பார்ப்போம்.

விவசாய மின் மோட்டார்கள்

"ஆற்றில் போட்டாலும் அளந்து போடவேண்டும்" என்று தமிழ்நாட்டில் பழமொழி ஒன்று கூறுவார்கள். அதாவது, "என்ன செய்தாலும் அதற்கு கணக்கு இருக்க வேண்டும்" என்பதுவே அதன் பொருள்.

தமிழ்நாட்டில் தற்போது விவசாய கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாத நிலவரப்படி, 23 லட்சத்து 56 ஆயிரம் விவசாய மோட்டார்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

கணக்கில் வராத மின்சாரம் எவ்வளவு?

ஆனால், விவசாய மோட்டார்களில் மின் மீட்டர் பொருத்தப்படாததால், எவ்வளவு யூனிட் மின்சாரம் செலவு செய்யப்படுகிறது என்ற கணக்கீடு இல்லாமல் இருக்கிறது. மொத்தத்தில் கணக்கில் வராத மின்சாரம் எவ்வளவு இருக்கிறதோ, அத்தனையும் விவசாயத்திற்கு வழங்கப்பட்டாத கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இதுவே, முறைகேடுகளுக்கும் காரண கர்த்தாவாகிவிடுகிறது. முதலில், விவசாய மோட்டார்களுக்கு மீட்டர் பொருத்தினால், அதன் மூலம் எவ்வளவு மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்ற கணக்கு கிடைத்துவிடும். அதையும் தாண்டி, கணக்கில் வராத மின்சாரம் இருந்தால், அது எங்கேயோ முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.

மின் மீட்டர் அவசியம்

இந்தியாவில் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றான குஜராத்தில், விவசாய மோட்டார்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுவதில்லை என்றாலும், குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதனால், மின்சாரம் விரையம் ஆக்கப்படாது என்பது அங்குள்ள வேளாண் துறையின் கணிப்பு.

தமிழ்நாட்டில் இவ்வாறு விவசாய மின் மோட்டார்களுக்கு கட்டணம் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், மின் மீட்டர் அவசியம் என்றே தோன்றுகிறது. அப்போதுதான் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

வெளிச்சம் கிடைக்குமா?

மேலும், தனியாரிடம் அதிக கட்டணம் கொடுத்து வாங்கும் மின்சார டெண்டர்களையும் ரத்து செய்துவிட்டு, குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வாங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், சொந்த மின் உற்பத்தியை அரசு அதிகரிப்பதுடன், மத்திய தொகுப்பில் இருந்தும் கூடுதல் மின்சாரத்தை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால், இருளில் தவிக்கும் மின் துறைக்கு வெளிச்சம் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும்.