சென்னை,
கூட்டுறவு வங்கிகள் மூலம் நீண்டகாலக் கடன்கள் வழங்கச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி கடன் வழங்கும் இலக்கை எய்தும் வகையில், வாரந்தோறும் சிறப்பு கடன் முகாம்கள் மற்றும் கடன் மேளா நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப் பெண்கள் கடன்கள் மற்றும் வீட்டு வசதி கடன்களுக்கான சிறப்பு முகாம்களும், வெள்ளிக்கிழமைகளில் இதர முன்னுரிமை துறைக் கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
மேலும், கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.50 கோடி மதிப்பிலான நீண்ட காலக் கடன்களும் (Long Term Loans) இச்சிறப்பு முகாம்களில் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. இதில் வேளாண் இயந்திர மயமாக்கல், குளிர் பதங்கிடங்குகள் அமைத்தல், கால்நடை வளர்ப்பு (கறவை மாடு, ஆடு, கோழி), மற்றும் அறுவடைக்கு பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான கடன்கள் வழங்கப்படும் .
தகுதியுடைய உறுப்பினருக்கு அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை நீண்ட காலக் கடன் வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் (PCARDB) உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயனடையலாம். விண்ணப்பத்துடன் புகைப்படங்கள், அடையாளச் சான்று, முகவரிச் சான்று, கேஒய்சி ஆவணங்கள் மற்றும் நில அடமான ஆவணங்களை சமர்ப்பித்திட வேண்டும்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திப் பொருளாதார மேம்பாடு அடையக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு 9884000845 என்ற வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனக் கூட்டுறவுத்துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.