தமிழக செய்திகள்

புதிய டிசைனில் வேட்டி, சேலை வழங்க முடிவு - அமைச்சர் விஜய் பாலாஜி விளக்கம்

பெரும்பாலானோர் வெளுக்கப்படாத 8 முழ வேட்டிக்கு பதிலாக வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டியே விருப்பம் என தெரிவித்தனர்.

சென்னை:

தமிழ்நாட்டில் 4-ல் 3 பங்கு மக்கள் 4 முழ வேட்டியையே விரும்புவதால், 2027-ம் ஆண்டு பொங்கல் திருநாளில் 4 முழ வேட்டி வழங்கப்படும் என்று கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.

சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின், பொங்கல் திருநாளில் வழங்கப்படும் விலையில்லா வேட்டியின் அளவை 8 முழத்தில் இருந்து 4 முழமாக குறைத்திருப்பதால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜய் பாலாஜி கூறியதாவது:-

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில், பல ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுவதாகவும், இந்த முறை புதிய வடிவமைப்பில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வந்தன.

4 முழ வேட்டி, ஜரிகை தைத்த சேலை

இதையடுத்து முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் அனைத்து மாவட்டங்களிலும் துறைச் செயலாளர்கள் மற்றும் சரக அதிகாரிகள் மூலம் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில் பெரும்பாலானோர் வெளுக்கப்படாத 8 முழ வேட்டிக்கு பதிலாக வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டியே விருப்பம் என தெரிவித்தனர். அதன் அடிப்படையில்தான் 4 முழ வேட்டியும், ஜரிகை தைத்த சேலையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் சரகத்தில் பெடல் தறிகளில் தொடர் வேலைவாய்ப்பு மூலம் உற்பத்தி செய்யப்பட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் சேலைகளையும் அரசு கொள்முதல் செய்யும். நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக அரசு வழங்கிய மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட வேட்டி, சேலைகளும் முழுமையாக கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT