சென்னை,
தமிழகத்தில் அரசு நிலங்களுக்கு வசூலிக்கப்படும் குத்தகை கட்டணங்களை, தற்போதைய சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க வருவாய்த்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் கல்வி, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பொது நோக்கங்களுக்காக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குத்தகை காலம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 30 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் நீண்டகால குத்தகை தேவைப்பட்டால், அரசு தனியாக ஆணை பிறப்பித்து அனுமதி வழங்குகிறது.
தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஏக்கர் வரை அரசு நிலங்கள் குத்தகை அடிப்படையில் தனியார் பயன்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலங்களுக்கு மிகவும் குறைவான குத்தகை கட்டணமே வசூலிக்கப்பட்டு வருகிறது. சில நிலங்களுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.100 முதல் ரூ.1,000 வரை குத்தகை வசூலிக்கப்படுகிறது. தமிழக அரசின் நிதி நிலவரம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட வெள்ளை அறிக்கையின்போது, அரசு நிலங்களின் குத்தகை மூலம் கிடைக்கும் வருவாயிலும் பெரும் இழப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து குத்தகை கட்டணங்களை மாற்றி அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்க தொடங்கியது.
இதுகுறித்து வருவாய்த்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:- ‘தமிழகத்தில் தற்போது வணிகமற்ற நோக்கங்களுக்காக வழங்கப்படும் நிலங்களுக்கு, நில மதிப்பில் ஆண்டுக்கு 7 சதவீதமும், வணிக நோக்கத்துக்காக வழங்கப்படும் நிலங்களுக்கு நில மதிப்பில் ஆண்டுக்கு 14 சதவீதமும் என்ற அடிப்படையில் குத்தகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பல நிலங்களுக்கு 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு முந்தைய நில மதிப்பின் அடிப்படையிலேயே குத்தகை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் இழப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து குத்தகை கட்டணத்துக்கான சதவீதம் மற்றும் நில மதிப்பு ஆகியவற்றை தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் அரசின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும்.’ இவ்வாறு அவர் கூறினார்.