சேலம்,
சேலம் மாவட்டத்தில் 5 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை இட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 180-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் சராசரியாக ரூ.5 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை இருமடங்கு அதிகரிக்கும். மாவட்டம் முழுவதும் 162 மேற்பார்வையாளர்கள், 600 விற்பனையாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதற்கு முன்பு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது.
ஆனால் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மதுப்பிரியர்களிடம் பாட்டிலுக்கு எக்காரணத்தை கொண்டும் கூடுதலாக ரூ.10 வசூலிக்கக்கூடாது என்றும், அவ்வாறு வசூலிப்பது தெரியவந்தால் பணி இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி ஒருசில கடைகளில் இன்னமும் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவதாக மதுப்பிரியர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 180 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் விவரத்தை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில். டாஸ்மாக் கடைகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இட மாற்றம் செய்யப்பட உள்ளனர். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்த ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். பலமுறை எச்சரிக்கை செய்தும் சிலர் கேட்காமல் வசூலிப்பதாக புகார் வருகிறது. எனவே. அவ்வப்போது டாஸ்மாக் கடைகளில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். என்றனர்.