சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விஜய்யிடம் விவாகரத்து கேட்டு சங்கீதா தொடர்ந்த வழக்கு தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில், ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து விஜய்க்கு ஆதரவாக த.வெ.க. பெண் தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஆலோசராக இருந்த பொன்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தன் கட்சிப் பெண்களை இழிவாக பேசிய பொன்ராஜுக்கு எதிராக தமிழ்நாடு டி.ஜி.பி.யிடம் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார். அதேபோல கடலூர் புதுநகர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார்களின் அடிப்படையில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பொன்ராஜ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, "ஒரே சம்பவத்திற்காக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் வெளியான பெண் தொண்டர்கள் தெரிவித்த கருத்துகளை கண்டிக்கும் வகையில் மனுதாரர் கருத்து தெரிவித்தார்.
அதற்காக தற்போதைய முதல்-அமைச்சர் நேரில் சென்று டி.ஜி.பி.யிடம் கடந்த மார்ச் 26-ந்தேதி புகார் அளித்தார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த 12-ந்தேதி பொன்ராஜ் மீது போலீசார் இரண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். பொன்ராஜை பொறுத்தவரை போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளார். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்" என்றார்.
போலீஸ் தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஜான் சத்யன் ஆஜராகி, "பல பெரிய பதவிகளை வகித்த மனுதாரர் ஒரு கட்சிக்கு ஆதரவாக பெண்களுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்துள்ளார். தன் கட்சித் தலைவர் விஜய்யின் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக பெண்கள் தெரிவித்த கருத்தை மனுதாரர் கடுமையாக விமர்சித்துள்ளார். இவ்வாறு விமர்சிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரது சர்ச்சைக்குரிய பேட்டி சமூக வலைதளத்தில் இன்றும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.