புதுடெல்லி,
தலைநகர் டெல்லியின் கல்காஜி பகுதியில் டெல்லி வளர்ச்சி ஆணையம்(DDA) சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 10-வது தளத்தில் இருந்து, மிதுன் தாஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு குழந்தை தூங்கிய பின் மிதுன் தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே உள்ள அறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்த குழந்தை, பால்கனி அருகே சென்று எட்டிப்பார்த்தாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறி அந்த குழந்தை 10-வது மாடியில் இருந்து கீழே விழுந்தது. இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
குழந்தை கீழே விழுந்ததை அறிந்து மிதுனின் குடும்பத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது, குழந்தை ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்தது. பின்னர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பால்கனியில் இரும்பு கிரில் போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இந்த விபத்திற்கு காரணம் என குழந்தையை இழந்த பெற்றோர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.