புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்-அமைச்சராக பதவி வகித்தபோது டெல்லி பிளாக்ஸ்டாப் சாலையில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில் வசித்து வந்தார்.
அந்த சமயத்தில் கெஜ்ரிவால் அரசு பங்களாவில் வரம்பு மீறிய செலவுகளை செய்து வருகிறார் என பா.ஜ.க. குற்றம்சாட்டி வந்தது. அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு கெஜ்ரிவால் தன்னை ஒரு எளிய மனிதர் என்று காட்டிக் கொண்டதற்கு முரணாக அவரது செயல்பாடுகள் உள்ளதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
இந்நிலையில் கடந்த 2025-ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கெஜ்ரிவால் மீதான விமர்சனங்களை பா.ஜ.க. மீண்டும் தீவிரப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கெஜ்ரிவால் வசித்த இல்லத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடுவதற்கு டெல்லி பா.ஜ.க. அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், அந்த இல்லத்தில் உள்ள பொருட்கள் மீது அவற்றின் விலையை எழுதி வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்கு ரூ.5.8 லட்சம் மதிப்புள்ள ஒப்பனை அறை, ரூ.41 லட்சம் மதிப்புள்ள காத்திருப்பு அறை, ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள வரவேற்புப் பகுதி ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அந்த வீடு பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.