தமிழக செய்திகள்

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும்

கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் உள்ள சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்தில் அகில பாரத இந்து ஆன்மிக பேரவை சார்பில் மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கண்ணன், மாநில தலைவர் திருவேங்கடம் ஆகியோர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்யக்கூடிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். இதயம், நரம்பியல் பிரிவுகளுக்கு சிறப்பு டாக்டர்களை நியமிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் கடந்த 2020-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்யும் ஸ்கேன் வசதி மற்றும் இதயம் நரம்பியல் பிரிவுகளுக்கு சிறப்பு டாக்டர்களை நியமிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில் ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும். சிறப்பு டாக்டரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். மேலும் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அந்த ஆஸ்பத்திரிகள் அனைத்திலும் சிறப்பு டாக்டர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.