தமிழக செய்திகள்

8 கிராம மீனவர்களின் கோரிக்கைகள்: நியாயமான, சட்டபூர்வமான தீர்வு காணும் வகையில் நடவடிக்கை அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

நான் விரைவில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, நிலைமையை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளேன் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

சென்னை,

எண்ணூரை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 கிராம மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் கலந்துரையாடல்.

கலந்தாய்வு

இன்று சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் எண்ணூரை சுற்றியுள்ள நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 8 கிராம மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து மீனவ சங்க பிரதிநிதிகளுடன் விரிவான கலந்தாய்வு மேற்கொண்டார்.

கலந்தாய்வுக்குப்பின், அமைச்சர் அவர்கள் மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் பேசுகையில்,

முதலில், இன்று தங்களுடைய கருத்துகளையும் கோரிக்கைகளையும் நேரடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசு மற்றும் முதல்-அமைச்சர், வளர்ச்சி திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; இரண்டையும் சமநிலையுடன் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்ற உறுதியான கொள்கையை கொண்டுள்ள மக்களுக்கான அரசு.

சமநீதி

இன்று நடைபெற்ற இந்த கலந்தாய்வில், குறிப்பாக வேலைவாய்ப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுகட்டுப்பாடு மற்றும் பொதுநல கோரிக்கைகள் குறித்து தாங்கள் முன்வைத்த கருத்துகள் அனைத்தையும் மிகவும் கவனமாக கேட்டறிந்துள்ளோம். வேலைவாய்ப்பு தொடர்பாக, அரசால் நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய, சட்டரீதியாக நிலைத்திருக்கும், அனைவருக்கும் சமநீதியை வழங்க கூடிய ஒரு நிரந்தர நடைமுறை உருவாக்கப்படும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதற்காக, எட்டு மீனவ கிராமங்களின் பதிவு செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பங்களின் விவரங்கள், உண்மையாக மீன்பிடி தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள், பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு செய்து ஒரு செயல்பாட்டு வழிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டபூர்வமான தீர்வு

இந்த நடைமுறை, தற்போதைய ஆட்சேர்ப்புகளுக்கு மட்டுமல்லாமல், எதிர்கால ஆட்சேர்ப்புகளிலும் தொடர்ச்சியாக பின்பற்ற கூடிய வகையில் இருக்கும் என்பதே அரசின் நோக்கமாகும். அதே நேரத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏற்கனவே நீண்டகாலமாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் உரிமைகளையும் கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எனவே, அனைவருக்கும் நியாயமான மற்றும் சட்டபூர்வமான தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கோரிக்கை

தாங்கள் முன்வைத்த சுற்றுச்சூழல், சாம்பல்அகற்றுதல், நீர்வழிப்பாதைகள், ஆற்று பராமரிப்பு, ஒப்பந்தப் பணிகள் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் மூலம் ஆய்வு செய்து, உடனடியாக மேற்கொள்ளக் கூடிய பணிகள் விரைவு படுத்தப்படும்.

இன்றுடன் முடிவடைவதல்ல

மேலும், நான் விரைவில் சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, நிலைமையை ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளேன். இந்த பேச்சு வார்த்தை இன்றுடன் முடிவடைவதல்ல. இன்று, தாங்கள் அளித்த அனைத்து கோரிக்கைகளையும் அதிகாரிகள் தொகுத்து ஆய்வு செய்வார்கள். மீண்டும் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தி, நடைமுறையில் செயல்படுத்த கூடிய தீர்வுகளை முன்வைத்து விவாதிப்போம்.

நிரந்தர தீர்வு

அரசின் நோக்கம் வெறும் வாக்குறுதி வழங்குவது அல்ல; நடைமுறையில் செயல்படுத்த கூடிய, அனைவராலும் ஏற்று கொள்ள கூடிய நிரந்தர தீர்வை உருவாக்குவதே ஆகும். அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த முயற்சி வெற்றியடையும். தேவையற்ற சட்டப் பிரச்சினைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் ஒரு நல்ல முடிவை எட்டுவோம் என்று நான் நம்புகிறேன்.

உறுதி

முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின் படி, எண்ணூர் பகுதி மீனவர்களின் நலன், வாழ்வாதாரம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதை இந்த தருணத்தில் உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன் என்று பேசினார்.

கலந்து கொண்டனர்

உடன், கூடுதல் தலைமை செயலாளர்/ மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், எரிசக்தி துறை முதன்மை செயலாளர் அனில்மேஷ்ராம், மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் ம. கோவிந்தராவ், பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநர் பி. என். ஸ்ரீதர், மின் பகிர்மானம் மற்றும் மின் தொடரமைப்பு கழக இணை மேலாண்மை இயக்குநர் ஐ.சா. மெர்சிரம்யா, மீன்வளம், காவல்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.