தமிழக செய்திகள்

நடிகை சவுகார் ஜானகி மறைவு - காங்கிரஸ் கட்சி இரங்கல்

சவுகார் ஜானகியின் மறைவு செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;-

“பழம்பெரும் திரைப்பட நடிகை சவுகார் ஜானகி அவர்கள் தமது 94-வது வயதில் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனியிடத்தை பிடித்தவர்.

சிவாஜிகணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார். கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். சவுகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.