சென்னை,
மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் உள்ள மாதவ் நகர் ரெயில் நிலையம் அருகே அமைந்திருந்த ஷாஹி தர்கா, மஸ்ஜித் கலந்தரி உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பழமையான மசூதிகள் மற்றும் தர்காக்கள் கடந்த நவம்பர் 21, 2026 அன்று இடிக்கப்பட்டதற்கு எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகமது ஷபி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“உஜ்ஜைனியில் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சிம்ஹஸ்தா மகா கும்பமேளா ஏற்பாடுகளைக் காரணம் காட்டி, பெருமளவிலான காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் இந்த இடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இடிக்கப்பட்டவற்றில் சுமார் 636 ஆண்டுகள் பழமையான மசூதியும் அடங்கும். இந்த நிலம் தொடர்பான வழக்கு போபால் வக்பு தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சட்டப்பூர்வ தீர்ப்புக்குக் காத்திருக்காமல் வழிபாட்டுத் தலங்களைத் தரைமட்டமாக்கியது நிர்வாகத்தின் அப்பட்டமான அதிகார அத்துமீறலாகும்.
பொது உள்கட்டமைப்பு மற்றும் மதக் கூட்டங்களைக் காரணமாகக் காட்டி வரலாற்றுப் பாரம்பரியச் சின்னங்களை அழிப்பதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 25, 26 மற்றும் 300-ஏ ஆகிய பிரிவுகள் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளன.
குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் சந்தேகத்திற்குரிய நிர்வாகக் காரணங்களைக் காட்டி சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருவது கவலையளிக்கிறது. இந்த விவகாரத்தில் மதச்சார்பின்மை பேசும் ஏனைய அரசியல் கட்சிகளின் மவுனமும் கண்டனத்திற்குரியது. இதற்கு எதிராக உள்ளூர் கமிட்டி முன்னெடுத்துள்ள சட்டப் போராட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சி முழு ஆதரவை அளிக்கும்.
புல்டோசர் நடவடிக்கைகள் என்பது பாகுபாடு காட்டுவதற்கான அல்லது மக்களை அச்சுறுத்துவதற்கான கருவியாக மாறிவிடக் கூடாது. எந்தவொரு அரசாங்கமும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலானதல்ல. இந்த இடிப்பு நடவடிக்கைக்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மதச் சுதந்திரம் மற்றும் வரலாற்றுப் பாரம்பரியங்கள் எவ்விதப் பாகுபாடுமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.