சென்னை,
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் பற்றி பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில், சென்னை தெற்கு, தென்மேற்கு, மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக கையில் பதாகைகள் ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதேபோல, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், ஆர்.டி.சேகர். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிராக சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் 700-க்கும் மேற்பட்டோர் மீது 3 பிரிவுகளில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.