தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகரில் கொசு உற்பத்தி செய்ததாக பழைய பொருட்கள் சேகரிக்கும் 2 கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண் 12-க்கு உள்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி மற்றும் எட்டையாபுரம் பிரதான சாலை பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு ஆய்வு பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கச் செய்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது வீடுகள் மற்றும் கடைகளைச் சுற்றி குப்பைகள் சேராமலும், மழை நீர் அல்லது உபரித் தண்ணீர் தேங்காமலும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.