தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 1,534 பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை,

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 1,534 பள்ளிகளில் இன்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வி வளாகங்களில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் உயர்கல்வி பயிலும் கல்லூரி வளாகங்களில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டலம் 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் உள்ள 635 அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சியின் சென்னை பள்ளிகள், 899 தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,534 பள்ளிகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் இன்று (26.09.2026) தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த பணிகளில் 3,214 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பள்ளிகளின் வளாகங்களில் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள 7,419 கிலோ தேவையற்ற பொருட்களும், 932 கிலோ பயன்படுத்தப்பட்ட பழைய டயர்களும் அகற்றப்பட்டன. இதற்காக 262 கொசுக்கொல்லி மருந்து மற்றும் கொசுப்புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேக்கமின்றி அகற்றிடவும், மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்புடைய தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்றி வளாகத்தினை சுத்தமாக வைத்திடவும், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT