தமிழக செய்திகள்

சென்னையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்... கோடம்பாக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தினார்.

சென்னை,

கோடம்பாக்கம் மண்டலத்தில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இன்று வீடு வீடாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஆய்வு

கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள எம்ஜிஆர் கால்வாயின் பராமரிப்பினையும் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, 2ஆவது செக்டார், 13ஆவது தெருவில், வீடு வீடாகச் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை கள ஆய்வு செய்தார்.

மருத்துவர்களின் ஆலோசனை

மேலும், மக்களிடையே விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, வீட்டில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தூய்மையாக வைத்திடவும், காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளவும், மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, தலைமை பூச்சி தடுப்பு அலுவலர் செல்வகுமார், மண்டல அலுவலர் புருசோத்தமன் மற்றும் அலுவலர்கள், டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT