சென்னை
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆசிரியர் பணியாற்றுவதற்கு தகுதி தேர்வினை கட்டாயமாக்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதையடுத்து பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வரும் ஜூலை 4, 5 தேதிகளில் சிறப்பு தகுதி தேர்வு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 14-ந்தேதி வெளியிட்டுள்ளது. அதேவேளை, இதில் உள்ள தேர்ச்சி மதிப்பெண் நடைமுறை பல ஆண்டுகளாக தங்களை அர்ப்பணித்து பணியாற்றி வரும் ஆசிரியர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது.
2003, 2004 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் மூலம் சத்துணவு அமைப்பாளர்கள் ஆசிரியர்களாக பணி ஈர்ப்பு செய்யப்பட்டபோது அனைவரும் 'பணியில் உள்ள ஒரே வகுப்பினர்' என கருதப்பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தேர்வுகளில், பொதுவான ஒரே குறைந்தபட்ச மதிப்பெண் மட்டுமே தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 40 விழுக்காடு (150 க்கு 60) மதிப்பெண்களும், இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 விழுக்காடு (150 க்கு 75) மதிப்பெண்களும் சிறப்பு தளர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மாநிலத்தில் உள்ள எம்.பி.சி. எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சிறப்பு மதிப்பெண் சலுகை அறிவிக்கப்படவில்லை. தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உள்ள நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் பணிநிலைப்பு தொடர்வதில் இப்பிரிவினர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இதனை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது. 'சமூக நீதியின் தொட்டில்' என வாய்க்கு வாய் பேசும் திராவிட மாடல் அரசு ஏற்கனவே உள்ள ஒரு குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டு பிரிவினரை ஏன் புறக்கணிக்கிறது? இன்னொரு புறம் 'சமத்துவம்' பேசும் இந்த அரசு ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தேர்வில் 'சமத்துவத்தகுதி' முறையை பின்பற்றாமல் பாகுபாடு ஏற்படுத்துவது ஏன்? மேலும் ஒரு பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் 15 மதிப்பெண்கள் வித்தியாசம் உள்ளது. ஓரிரு மதிப்பெண் வேறுபாட்டிலேயே ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்.
இது நியமன தேர்வு அல்ல, தகுதி தேர்வுதான். இதற்கு இவ்வளவு வித்தியாசம் தேவையில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரே நிலையில் உள்ள பணியாளர்களை தகுதி சோதனையின்போது மீண்டும் உட்பிரிவுகளாக பிரிப்பது சட்ட ரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்கும். ஒரே பள்ளியில், ஒரே பாடத்தை போதிக்கும் இரு ஆசிரியர்களில், ஒருவருக்கு ஒரு தேர்ச்சி மதிப்பெண் தகுதியாகவும், மற்றொருவருக்கு வேறு மதிப்பெண் தகுதியாகவும் நிர்ணயிப்பது தேவையற்ற முரண்பாடுகளையே ஏற்படுத்தும். தமிழக அரசின் பிற துறைகளில் பணியில் உள்ளோருக்காக நடத்தப்படும் தகுதி தேர்வுகளில், சமூக பிரிவினை கடந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான 45% மதிப்பெண் முறையே பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆகவே ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வும் ஒரு துறை சார்ந்த தகுதி தேர்வு என்பதால், இதிலும் ஒரே மதிப்பெண் முறையை பின்பற்றுவதே நிர்வாக சமச்சீரை உருவாக்கும். சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு தீர்ப்புகளில் தகுதி தேர்வு என்பது ஒரு 'வடிகட்டி' மட்டுமே என்றும், அதில் தளர்வுகள் வழங்குவது மாநில அரசின் கொள்கை முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே, பணியில் உள்ள ஆசிரியர்களின் பணி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச தகுதியான 40% (60 மதிப்பெண்கள்) என்பதை அனைவருக்கும் பொதுவாக்க வேண்டும்.
எனவே, பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 40 விழுக்காடு மதிப்பெண்களை பொதுவானதாக நிர்ணயிக்க வேண்டும் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு சலுகை மதிப்பெண் குறைத்து தனியாக அறிவிக்க வேண்டும்.