திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக் (26 வயது). என்ஜினீயரான இவர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது.
கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரம் அறிந்த இருவீட்டு பெற்றோரும், அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்கிடையில் இவர்களின் திருமணம் தாமதமானதால் தீபக், மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலியின் அலுவலகத்துக்கு சென்ற தீபக், அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றார். காதலியின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து படுக்கை அறைக்குச் சென்ற தீபக், அங்கிருந்த மின்விசிறியில் காதலியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிதுநேரம் கழித்து அறைக்குள் சென்ற காதலி, தீபக் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அயப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.