கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த மாதம் தம்பதிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனைவி குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே புதூர் சி.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் சகாய எல்டின் (40 வயது). மீன்பிடித்தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அனுஜா (36 வயது). இவர் மீனவர் கூட்டுறவு சொசைட்டியில் எழுத்தராக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் தம்பதிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அனுஜா குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த சகாய எல்டின் வீட்டில் உள்ள மின் விசிறியில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தபோது சகாய எல்டின் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரது மனைவி அனுஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து வந்த அனுஜா மண்டைக்காடு போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சகாய எல்டினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.