சென்னை,
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் போர் காரணமாக மேற்கு ஆசிய நாடுகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சமையல் கியாஸ் வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று கருதிய பொதுமக்கள் தாங்கள் 'புக்' செய்த சிலிண்டர்கள் தங்கள் வீடு தேடி வரும் வரை காத்திருக்காமல் நேரடியாக கியாஸ் ஏஜென்சிகளுக்கு சென்று வாங்கிச் செல்லும் நிலையும் நிலவி வருகிறது.
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் தமிழகம் முழுவதும் பரவியது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் 3-வது நாளாக இன்றும் பல்வேறு இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் அலைமோதி வருகின்றனர். சென்னையில் தியாகராயநகர், அண்ணாநகர், மாம்பலம், ராயப்பேட்டை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பினர்.
பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பி கொண்டனர். இதுதவிர குடிநீர் கேன், பாட்டில்களிலும் பெட்ரோல், டீசல் வாங்கி சென்றனர்.
தினசரி வேலை, அலுவலக பயணம் மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்கவே முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம் என்றும், தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்கிறோம் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டதில் பல பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நேற்று காலை முதலே வாகன ஓட்டிகள் அதிக அளவில் குவிந்தனர். அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பி சென்றனர்.
கோவையில் ஆட்டோ கியாஸ் விற்பனை பங்க் ஒன்றில் ஒரு லிட்டர் கியாஸ் ரூ.65-ல் இருந்து ரூ.85 வரை விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 20-க்கும் மேற்பட்ட கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அந்த பங்க்கை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் காலி கேன்களில் பெட்ரோல் வாங்க மக்கள் கூட்டம் கூடியதால் பரபரப்பு நிலவியது.
திருச்சியில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. கியாஸ் வாகனங்களுக்கு கியாஸ் கிடைக்காததால் கியாஸ் நிரப்பும் மையங்கள் பல நேற்று மூடப்பட்டன. திறந்து இருந்த சில மையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. தஞ்சை மற்றும் கும்பகோணத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் நேற்று அலைமோதினர். நீண்ட வரிசையில் காத்திருந்து வாகனங்களுக்கும், கேன்களுக்கும் பெட்ரோல் நிரப்பியதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும், மோதல்களும் ஏற்பட்டன.
சேலம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் உள்ள பங்குகளில் பெட்ரோல், டீசல் வாங்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், வாகன ஓட்டிகள் கேன் மற்றும் பானைகளில் எரிபொருளை போட்டிப்போட்டு நிரப்பிச் சென்றனர். பாதுகாப்பு கருதி கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் வழங்கத் தடை விதிக்கப்பட்டதோடு, கடலூர் மாவட்டத்திலுள்ள 217 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விதிமுறைகளை மீறி பாத்திரங்களில் எரிபொருள் வாங்கக்கூடாது என போலீசார் வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து, நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். இதேபோல தமிழகத்தின் பிற இடங்களிலும் பெட்ரோல், டீசல் நிரப்ப விற்பனை நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
முன்னதாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. எனவே மக்கள் அச்சப்படத்தேவையில்லை. வீண் பதற்றம் வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்திருந்தது. இதேபோன்று எண்ணெய் நிறுவன அதிகாரிகளும், தமிழகத்தில் எங்கும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் தடையின்றி கிடைக்கும் என்று கூறி உள்ளனர்.