தமிழக செய்திகள்

திமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு நிறைவு? இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரத்தை வெளியிடுகிறார்கள்.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், சட்டசபை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிவடைந்துவிட்டது. அ.தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்டது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டார்.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்றே தொகுதி ஒதுக்கீடு முடிந்து வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடு முடியாததால் இழுபறி நீடித்தது.

இந்த நிலையில், மார்க்சிஸ்ட் மற்றும் தேமுதிகவுடன் தொகுதி ஒதுக்கீடு முடிந்துள்ளது. திமுகவுடன் இன்று ஆலோசனை நடத்திய தேமுதிக நிர்வாகிகள் தொகுதி ஒதுக்கீட்டை முடித்தனர்.இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிகவின் எல்.கே. சுதீஷ், “இன்று மாலை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதிகள் பட்டியலை அறிவிப்பார்” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே இன்னும் தொகுதி ஒதுக்கீடு முடியவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே உடன்பாடு எட்டப்படவில்லை என சொல்லப்படுகிறது. எனவே, இன்று மாலைக்குள் திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு அது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று கூறப்படுகிறது. வேட்பாளர் பட்டியலும் இன்றே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.