தமிழக செய்திகள்

எளிய மக்களின் இசையை திரையில் ஒலிக்கச் செய்தவர் தேவா - அன்புமணி

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்த சிறப்பு தேவாவுக்கு உண்டு.

சென்னை,

பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என்று போற்றப்பட்டவருமான தேவா மறைவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேனிசைத் தென்றல்

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், தேனிசைத் தென்றல் என்று போற்றப்பட்டவருமான தேவா உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்த் திரையுலகுக்கு இசையமைப்பாளர் தேவாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும். எளிய பின்னணியிலிருந்து வந்த தேவா, தமிழ்த் திரையுலகை இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் ஆட்சி செய்து கொண்டிருந்த நிலையில், தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து இசை சாம்ராஜ்யம் நடத்தியவர்.

தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசையமைத்த சிறப்பு தேவாவுக்கு உண்டு. ரஜினிகாந்த், கமலஹாசன், இன்றைய முதல்-அமைச்சர் விஜய், அஜித் உள்ளிட்டோரின் ரசிகர்களால் கொண்டாடப்படும் அவர்களின் பெரும்பாலான பாடல்களுக்கு இசை அமைத்தவர் தேவா. எளிய மக்களின் இசையான கானா இசையை திரையில் அறிமுகம் செய்தவரும் தேவா அவர்கள் தான்.

சில நாள்களுக்கு முன்பு வரை திரைப்படங்கள், தொலைக்காட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், திடீரென நம்மை விட்டு பிரிந்ததைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட இதே காலத்தில் அவரது சகோதரர் சபேஷ் மறைந்தது அவரை மனதளவில் கடுமையாக பாதித்திருந்தது. மிகவும் நல்ல மனிதரான தேவா அவர்களின் மறைவு இசையுலகிற்கு பெரும் இழப்பு ஆகும்.

இரங்கல்

தேனிசைத் தென்றல் தேவா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT