தமிழக செய்திகள்

ராணிப்பேட்டைக்கு எடுத்துச்செல்லப்படும் தேவாவின் உடல்: இன்று மாலை இறுதிச்சடங்கு

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

சென்னை,

தேனிசைத் தென்றல் தேவா, சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவரது உடல்நிலை மோசமடைய, அவர் உடனடியாக அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டபோதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 75. தேவா உயிரிழந்த தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

விஜய்-மு.க.ஸ்டாலின் இரங்கல்

இசையமைப்பாளர் தேவாவின் உடல் பின்னர் அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தேவாவின் உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவை கட்டிப்பிடித்து அவர் ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் உள்ளிட்டோரும் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிற அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் ஏராளமானோர் தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதை

இசையமைப்பாளர் தேவாவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனை தேவாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அமைச்சர் ராஜ்மோகனும் தெரிவித்தார்.

இன்று இறுதிச்சடங்கு

இந்த நிலையில், தேவாவின் சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூரில் அவரது உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து அங்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை தியாகராயநகர் இல்லத்தில் இருந்து சொந்த ஊரான ஆற்காடுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. மாலை அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கிறது.

சொந்த ஊரில் சோகம்

தேவாவின் மறைவு செய்தி அறிந்ததும், அவரது சொந்த ஊரான பழைய மாங்காடு, தேவாவின் மனைவி பிறந்த ஊரான சக்கரமல்லூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அந்த கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஆங்காங்கே தேவாவின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்கள் வைத்து உள்ளனர். சக்கரமல்லூர் பகுதியில் இசையமைப்பாளர் தேவாவின் பண்ணை வீடு உள்ளது. இங்கு அவரது உடல் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கப்படுகிறது. இதன் பின்னர் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ராணிப்பேட்டை ஆயுதப்படை போலீசார் இறுதி மரியாதை வழங்க உள்ளனர். இதற்காக பண்ணை வீட்டில் முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

SCROLL FOR NEXT