சென்னை,
சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி. எஸ்.சமீரன் அண்ணாநகர் கோபுர பூங்காவில் ரூ.7.28 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலத்தில் அண்ணாநகர் கோபுர பூங்கா (Annanagar Tower Park) சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பசுமைப்பரப்புடன் கூடிய நடைபாதை வசதி, பூங்கா உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் திகழும் பூங்காவினை நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தற்போது இப்பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள், மேம்பாட்டுப் பணிகள், கோபுர பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள், தூய்மைப் பணிகள் உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன் இன்று (02.07.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இப்பூங்காவில் உள்ள கோபுர பகுதியில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வர்ணங்கள் பூசுதல், மின் விளக்குகள் அமைத்தல், இதன் அருகில் செயற்றை நீரூற்று, கான்கிரீட் தளங்கள் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றையும், நடைபாதை அமைத்தல், குழந்தைகள் விளையாட்டுப் பகுதியில் உபகரணங்கள் சீரமைத்தல், வெளிப்பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் பராமரிப்பு, பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகள், மின் விளக்கு வசதி, பார்வையாளர்கள் அமரும் பகுதி மேம்பாடு, ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதையும்,
இப்பூங்காவில் உள்ள குளத்தில் ரூ.3.78 கோடி மதிப்பீட்டில் தூர்வாரி மேம்படுத்துதல், தடுப்புச்சுவர் அமைத்தல், நடைபாதை அமைத்தல், துருப்பிடிக்காத ஸ்டெயின்லஸ் ஸ்டீல் கைப்பிடிகள் அமைத்தல் உள்ளிட்ட புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளையும் ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளைத் துரிதமாகவும், விரைவாகவும் முடித்திடவும், பூங்காவினைத் தூய்மையாகப் பராமரித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பூங்காவில் உள்ள ஒப்பனை வளாகத்தினைப் பார்வையிட்டு, ஒப்பனை அறைகளைத் தூய்மையாகப் பராமரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட மக்களிடம் கலந்துரையாடி தேவைப்படும் வசதிகள் மற்றும் மேம்பாடு குறித்து கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்தஆய்வின்போது, மண்டல அலுவலர் எஸ்.இனியன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.