சென்னை,
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் தூய்மை பணிகளை வட்டார துணை ஆணையாளர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
வடக்கு வட்டார துணை ஆணையர் ஸ்வேதா சுமன், சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-36க்குட்பட்ட உதயசூரியன் நகரில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டட பணி, வார்டு-37க்குட்பட்ட முல்லை நகரில் உள்ள கால்பந்து மைதான கட்டட பணி, சர்மா நகரில் உள்ள விளையாட்டு திடலில் மேம்பாட்டு பணி, வார்டு-45க்குட்பட்ட அம்பேத்கர் கல்லூரி, ஈ.எச். சாலையில் உள்ள விளையாட்டு திடலில் மேம்பாட்டு பணி, அம்பேத்கர் கல்லூரி சாலையில் கட்டப்பட்டு வரும் உதவி பொறியாளர் அலுவலக கட்டட பணி மற்றும் விளையாட்டு திடலில் மேம்பாட்டு பணி, சுந்தரம் தெருவில் கட்டப்பட்டு வரும் சமூகக்கூட கட்டட பணி, கணேசபுரம் சுரங்கப்பாதை அருகில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மத்திய வட்டார துணை ஆணையர் கௌஷிக் சென்னை மாநகராட்சி, வார்டு-64க்குட்பட்ட சீனிவாச நகரில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் சென்னை உயர்நிலை பள்ளி கட்டுமான பணி, மல்லிகை அவென்யூ 1ஆவது தெரு, கண்ணகி நகர், காமராஜர் சாலை, மக்கார தோட்டம், வார்டு-68க்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்றுவது தொடர்பாகவும், வார்டு-64க்குட்பட்ட 200 அடி சாலையில் சாலை சந்திப்பு மேம்பாட்டு பணி, வார்டு-73க்குட்பட்ட ஸ்ட்ராஹான்ஸ் சாலையில் பெருமளவு குப்பை கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தெற்கு வட்டார துணை ஆணையாளர் அதாப் ரசூல், சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், வார்டு-150க்குட்பட்ட போரூர் சந்திப்பு சாலையில் மழைநீர் தேங்கும் பகுதி, மண்டலம், வார்டு-160க்குட்பட்ட கத்திப்பாரா சந்திப்பு சாலையில் மோட்டார் பொருத்திய டிராக்டர்கள் மூலம் மழைநீர் அகற்றும் பணி, அடையாறு மண்டலம், வார்டு-173க்குட்பட்ட எல்.பி. சாலையில் மழைநீர் தேங்கும் பகுதி, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-199க்குட்பட்ட நெடுஞ்செழியன் சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், அப்பகுதியில் உள்ள அம்மா உணவகம், நூக்கம்பாளையம் சாலையில் மோட்டார் பம்பு பொருத்தப்பட்ட டிராக்டர் மூலம் மழைநீர் அகற்றும் பணி, குமராசாமி நகரில் உள்ள பூங்கா, எல்காட் அவென்யூ பகுதியில் பெருமளவு குப்பைக் கழிவுகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாகவும், வார்டு-200க்குட்பட்ட நூக்கம்பாளையம் சாலை அருகே மரக்கன்றுகள் நடப்படவுள்ள இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.