தமிழக செய்திகள்

Evils, Evils என்று Devils பேசக்கூடாது: மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி.. சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் செய்த Action

உங்கள் தயவால் ஆட்சி நடக்கவில்லை. மக்கள் தயவால் நடக்கிறது என்று முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் கடந்த 18-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதன்பின்னர், 19 மற்றும் 22-ந் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.

போதைப்பொருள் நடமாட்டம்

இந்த நிலையில், சட்டசபை நிறைவு நாளான இன்று, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சட்டம் ஒழுங்கு குறித்து யார் கருத்து தெரிவித்தாலும் காது கொடுப்போம். இது மன்னர் ஆட்சி அல்ல, மனசாட்சி உள்ள மக்களாட்சி. போதைப்பொருள் நடமாட்டத்தை ஆரம்பத்திலேயே தடுக்க தவறியது யார்?. போதைப்பொருள் நடமாட்டம் தாறுமாறாக உள்ளது. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு இப்போது தான் விடை காண்கிறோம்.

வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே..

கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை. மக்கள் பணத்தை தொடமாட்டோம். தொடவிட மாட்டோம். மக்கள் பணத்தை தொட்டவர்களை விடமாட்டோம். பேசு பேசு என்று சொல்கின்றனர். வெறும் 5 நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டது.

எதற்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை விரும்புவர்கள் நாம் இல்லை. நமக்கு தமிழகத்தின் வளர்ச்சி மட்டும்தான் முக்கியம்.

கடந்த ஆட்சியில் நடந்த நிர்வாகக் கோளாறு காரணமாக மின்வெட்டு நிகழ்கிறது. வேண்டுமென்றே சிலரின் நடவடிக்கைகளால் மின்வெட்டு நடைபெறுகிறது. மின்வெட்டு நிலைமை விரைவில் நீக்கப்படும்.

அம்பேத்கர் கனவு

புதிய கல்வி கொள்கை மத்திய அரசு திணிக்கக் கூடாது. +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க மாட்டோம். நீட் வேண்டாம் என்பதே எங்கள் நிலைப்பாடு

சமூகநீதி எனச் சொன்னவர்கள் பட்டியலின சகோதரர்கள் எத்தனை பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்தீர்கள்? பட்டியலின சகோதரர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்ததன் மூலம் அம்பேத்கர் கனவு நிறைவேறியுள்ளது.

திமுக தயவால் தவெக ஆட்சியா..?

புதிதாக ஒரு வெப்பன் கொண்டுவந்துள்ளார்கள்; அவங்க தயவால்தான் நம்ம ஆட்சி நடக்கிறதாம். மக்கள் தயவால் இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது; மனசாட்சி உள்ள சக்திகளோட ஆதரவால் இந்த ஆட்சி நடந்துக்கொண்டிருக்கிறது.

உங்கள் தயவால் ஆட்சி நடக்கவில்லை. மக்கள் தயவால் நடக்கிறது. நீங்கள் அனுப்பி வைத்தால், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? சமூகநிதி அரசு என்று சொன்னீர்கள். உங்கள் அமைச்சரவையில் எத்தனை பட்டியலின அமைச்சர்கள் இருந்தார்கள்? எங்கள் அரசில் 4 பெண் அமைச்சர்கள் உள்ளனர். எங்கள் அரசில் 8 பட்டியலின அமைச்சர்கள் உள்ளனர்.

திமுக தயவால் தவெக ஆட்சி நடக்கிறதா? இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் சுயேச்சையாக முடிவெடுத்து எங்களுக்கு ஆதரவு அளித்தனர்.

நாம் யாருடைய பி டீமும் கிடையாது; Purely Peoples Team

இவ்வாறு அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலின் செய்கை

இதனைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த பதிலுரையின் நிறைவில் Evils, Evils என்று Devils பேசக்கூடாது என்று கூறி முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த செய்கையை முதல்-அமைச்சர் விஜய் செய்து காட்டியதால் பரபரப்பு நிலவியது.