தமிழக செய்திகள்

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 3-வது நாளாக தடை

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியை சிவப்பு மண்டலம் என்று மதுரை மாநகர போலீஸ் அறிவித்தது.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவை வழங்கியது. இதனால் தீபம் ஏற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து சுமார் 6 ஆயிரம் போலீசார் திருப்பரங்குன்றத்தில் குவிக்கப்பட்டனர்.

மேலும் மலைப்பகுதியை சிவப்பு மண்டலம் என்று மதுரை மாநகர போலீஸ் அறிவித்தது. இதற்கிடையே தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டவில்லை. அதற்கு பதிலாக மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீபமண்டபத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மற்றும் நகர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. நேற்றும் இந்த தடை தொடர்ந்தது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை 3-வது நாளாக இன்று தொடர்கிறது.

திருப்பங்குன்றம் மலைக்கு செல்லும் பிரதான நுழைவு வாசலில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மலைக்குச் செல்ல பக்தர்கள் பலர் வந்தனர். ஆனால் தடை தொடருவதாக கூறி அவர்களை போலீசார், அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி வைத்தனர். மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் ஆதார் சரிபார்ப்புக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். மலைக்குச்செல்ல பக்தர்களை அனுமதிக்கலாம் என அரசு அனுமதி வழங்கிய பின்னரே இந்த தடை விலக்கப்படும் என போலீசார் கூறினர்.

SCROLL FOR NEXT