தமிழக செய்திகள்

சூலூர் அருகே கோவில் விழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்துக்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பூசாரி சாட்டையடி நேர்த்திக்கடனையும் நிறைவேற்றினார்.

கோவில் விழா

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனை களும் நடந்தன. அதனை தொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழிபாடு நேற்று நடைபெற்றது.

தேங்காய் உடைத்து

இதையொட்டி மேளதாளங்கள் முழங்க, பக்திப் பரவசத்தில் அருள் வந்து ஆடியவாறு வந்த கோவில் பூசாரி பூஜை செய்யப்பட்ட தேங்காய்களை வரிசையாக அமர்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களின் தலையில் உடைத்தார். பின்னர், தலையில் தேங்காய் உடைத்துக்கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பூசாரி சாட்டையடி நேர்த்திக்கடனையும் நிறைவேற்றினார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.