தமிழக செய்திகள்

மகாளய அமாவாசை: தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆண்டுக்கு ஒரு முறை வரும் மகாளாய அமாவாசை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சென்னை,

அமாவாசை என்பது ஆன்மிகத்திலும், ஜோதிட சாஸ்திரத்திலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த புனித நாளாக கருதப்படுகிறது. அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் முழு ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே 'மகாளய அமாவாசை' என்று அழைக்கப்படுகிறது. இது 'பித்ரு அமாவாசை' என்றும், 'சர்வ பித்ரு அமாவாசை' என்றும், 'பித்ரு மோட்ச அமாவாசை என்றும் பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.

மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு

எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும், மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவை ஆடி மாதத்தில் வரும் 'ஆடி அமாவாசை', புரட்டாசி மாதத்தில் வரும் 'மகாளய அமாவாசை', தை மாதத்தில் வரும் 'தை அமாவாசை'. இவற்றில் மற்ற அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் கூட மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம்.

மறைந்த முன்னோர்கள் ஆடி அமாவாசையின்போது, பித்ரு லோகத்தில் இருந்து புறப்பட்டு பூமியை நோக்கி பயணிப்பார்கள் அப்படி புறப்பட்டவர்கள் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு அடுத்த நாளில் பூமிக்கு வந்துசேர்வார்கள். அடுத்த வரும் 15 நாட்களும் அவர்கள் பூமியிலேயே தங்கி இருந்து அவர்களின் வம்சத்தினர் அளிக்கும் நீரையும், உணவையும் ஏற்றுக்கொள்வார்கள். பின்னர், மகாளய அமாவாசை முடிந்ததும் மீண்டும் பித்ரு லோகம் நோக்கி புறப்படுவார்கள் என்பது நம்பிக்கை. அவ்வாறு பித்ரு லோகம் திரும்பி செல்லும் நாளே தை அமாவாசை என்று சொல்லப்படுகிறது.

'மகாளய பட்சம்'

ஆவணி மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை நாள் தொடங்கி அடுத்து வரும் 15 நாட்களும் 'மகாளய பட்சம்' என்று அழைக்கப்படுகிறது. 'பட்சம்' என்றால் 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசை ஆகும். பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வரும் முன்னோர்கள், தங்கள் சந்ததியினரிடம் இருந்து அவர்கள் அளிக்கும் பித்ரு தர்ப்பணம், சிரார்த்தம், தானம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, தங்களின் குடும்ப உறுப்பினர்களை ஆசீர்வதித்து செல்லும் காலமாக மகாளய பட்ச காலம் கருதப்படுகிறது.

மகாளய அமாவாசை

மாதந்தோறும் வரும் அமாவாசைகளில், முன்னோர்களில் யாரை நினைத்து தர்ப்பணம் கொடுக்கப்படுகிறதோ, அவர்கள் மட்டுமே தர்ப்பணத்தை பெற்றுக்கொண்டு ஆசி வழங்குவர். ஆனால், மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தால், முன்னோர்கள் அனைவரும் அதாவது 21 தலைமுறையைச் சேர்ந்த பித்ருக்கள் ஒன்றாக வந்து தர்ப்பணத்தை பெற்றுக்கொண்டு ஆசி வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால்தான் மகாளய அமாவாசையில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. மேலும், பித்ருக்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இந்தநிலையில், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மகாளய அமாவாசையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமாக விளங்கும் சுருளி அருவியில் புனித நீராடி பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதேபோல் வீரபாண்டி முல்லை பெரியாற்றின் கரையோர பகுதிகளில் புனித நீர்நிலைகளில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்து புனித நீராடி பின்னர் தர்ப்பணம் அளித்தனர். தங்கள் முன்னோர்களுக்கு எள்ளுப்பிண்டத்தை படையலாக வைத்து இந்த தர்ப்பணம் நடைபெற்றது.

திருவண்ணாமலை: மஹாளய அமாவாசை தினத்தை ஒட்டி ஐயங்குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர் மக்கள்.

திருச்செந்தூரில் மகாளய அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

SCROLL FOR NEXT