செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தெப்பக்குளம் வளாகத்தில், உலக அமைதி மற்றும் நன்மை வேண்டி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறப்பு யாகம் நடத்தியுள்ளனர்.
சர்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்திற்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர். அந்த வகையில், இன்று (சனிக்கிழமை) அங்கு வருகை தந்த வெளிநாட்டினர் மதங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து, இந்தியப் பாரம்பரிய முறைப்படி இந்து மதச் சடங்குகளுடன் யாகம் ஒன்றை மேற்கொண்டனர்.
தலசயனப் பெருமாள் கோவில் தெப்பக்குளம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வில், வேத மந்திரங்கள் முழங்க அக்னி குண்டத்தில் திரவியங்கள் இடப்பட்டன. உலக மக்கள் அனைவரும் அமைதியுடனும் நலமுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இந்தப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
வெளிநாட்டினர் மிகுந்த பக்தியுடனும் ஈடுபாட்டுடனும் இந்த யாகத்தில் பங்கேற்று வழிபட்ட வீடியோ காட்சிகள், சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகின. இக்காட்சிகள் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளன.