தமிழக செய்திகள்

தனுஷ்கோடியில் ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட மரப்பாலம் சேதம்: சுற்றுலா பயணிகள் அவதி

தனுஷ் கோடி வந்த சுற்றுலா பயணிகள், மரப்பாலத்தின் வழியாக நடந்து சென்று கிறிஸ்தவ ஆலயத்தை பார்த்து வந்தனர்.

ராமேசுவரம்,

தனுஷ்கோடியில் கிறிஸ்தவ ஆலயத்தை சுற்றி ரூ.40 லட்சத்தில் அமைத்த மரப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதிய டைந்து வருகின்றனர்.

கம்பிப்பாடு கடற்கரை

ராமேசுவரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரை. 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை மிகப்பெரிய தொழில் நகரமாக தனுஷ்கோடி பகுதி விளங்கியது. சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு தினமும் ரெயிலும் இயக்கப்பட்டது. அத்துடன் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று வந்தது.

தனுஷ்கோடி பகுதியானது 1964-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதி இரவு ஏற்பட்ட புயலால் முழுவதுமாக அழிந்தது. இந்த புயலில் தனுஷ்கோடியில் இருந்த அனைத்து கட்டிடங்களும் மண்ணோடு மண்ணாக புதைந்தன. கடந்த 62 ஆண்டுகளாக தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் தற்போது வரை புயலில் சேதமடைந்த அனைத்து கட்டிடங்களும் மண்ணோடு மண்ணாகவே காட்சியளித்து வருகிறது. இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையிலுள்ள புயலால் அழிந்துபோன கிறிஸ்தவ ஆலயம், ரெயில் நிலைய கட்டிடம், பள்ளிக்கூடம், தபால் நிலைய கட்டிடம் உள்பட அனைத்து கட்டிடங்களையும் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்து செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

பேவர்பிளாக் கற்கள்

மேலும் ராமேசுவரம் நகராட்சி நிர்வாகம் மூலம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் புயலால் அழிந்துபோன கட்டிடங்களை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கிறிஸ்தவ ஆலய கட்டிடத்தை சுற்றிலும் 3 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.40 லட்சத்தில் மரத்தினாலான பாலம் அமைக்கப்பட்டது. தனுஷ் கோடி வந்த சுற்றுலா பயணிகள் மரப்பாலத்தின் வழியாக நடந்து சென்று கிறிஸ்தவ ஆலயத்தை பார்த்து வந்தனர்.

தற்போது இந்த மரப்பாலம் பல இடங்களில் முழுவதுமாக உடைந்து சேதமடைந்த வருகிறது. அத்துடன் அதிலிருந்து பல இடங்களில் ஆணிகள் வெளியே நீட்டியபடி உள்ளது. எனவே மாவட்டம், நகராட்சி நிர்வாகம் உடனடியாக சேதமடைந்த மரப்பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் பயணிகள் எளிதில் நடந்து சென்று வரும் வகையில் அலங்கார பேவர்பிளாக் கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT