தருமபுரி,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் வாடிக்கையாளர் போல நடித்து, நகைக்கடையில் இருந்து 2 பவுன் தங்க நாணயத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 46). இவர் அப்பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த (செவ்வாய்க்கிழமை) மாலை, இவரது கடைக்கு வாடிக்கையாளர் போல ஒரு பெண் வந்துள்ளார். அவர் நகைகளை வாங்குவது போல நடித்து, கடையின் உரிமையாளரின் கவனத்தைத் திசை திருப்பியுள்ளார். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த 2 பவுன் தங்க நாணயத்தை லாவகமாகத் திருடிக்கொண்டு, கடையை விட்டு வெளியேறியுள்ளார்.
இதையடுத்து, கடையை அடைப்பதற்கு முன்பு நகைகளை சரிபாா்த்தபோது, 2 பவுன் தங்க நாணயங்கள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. உடனே, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பாா்த்தபோது நகை வாங்குவதுபோல வந்த பெண், தங்க நாணயங்களை திருடிச் சென்றது தெரியவந்தது.
தங்க நாணயங்கள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரஞ்சித், உடனடியாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அந்த பெண்ணைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.