சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். சூதாட்டம் நடந்ததாகவும், அதில் கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் டோனி தொடர்பு குறித்தும், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் கருத்து தெரிவித்தார். இதையடுத்து சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் ரூ.100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் டோனி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில், டோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வக்கீல் கமிஷனரை ஐகோர்ட்டு நியமித்துள்ளது. இந்த நிலையில், டோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யவேண்டும். அதை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும். வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க வேண்டும். வாக்குமூல பதிவை, நட்சத்திர ஓட்டல், தனியார் பங்களாக்களில் நடத்தாமல், கோர்ட்டு அல்லது அரசு கட்டிடங்களில் நடத்த வேண்டும் என்று சம்பத்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் சந்தன் கவுடர், நட்சத்திர ஓட்டலில் டோனியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதில் என்ன பிரச்சினை? அதற்கான செலவுகளை அவர்தானே செய்யப்போகிறார்? என கேள்வி எழுப்பினார். டோனி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனு தாக்கல் செய்ய டோனி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.