தமிழக செய்திகள்

பெருங்களத்தூர் அருகே ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே மின்சார ரெயில் இயக்கப்பட்டதா? - தெற்கு ரெயில்வே விளக்கம்

ஒரு ரெயில் மற்றொரு ரெயில் பின்னால் நிற்பதை மட்டும் காட்டுகின்றன.

சென்னை,

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் அருகே 2 மின்சார ரெயில்கள் ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிர் திசையில் இயக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த காட்சியில் ஒரு ரெயில் மற்றொரு ரெயில் பின்னால் நிற்பதை மட்டும் காட்டுகின்றன. இது வழக்கமான ரெயில்வே இயக்க நடைமுறையாகும்.

இந்த காட்சிகள் பொதுமக்களிடம் தவறாக சென்றடையும் வகையில் காண்பிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் முற்றிலும் தவறானது. ரெயில் இயக்கத்தை பொறுத்தவரையில், கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள், மேம்பட்ட சிக்னல் அமைப்புகள் மற்றும் தொடர்ச்சியான நேரடி கண்காணிப்பு ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இதுபோன்று தவறான தகவல்களை அடிக்கடி பரப்பி பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதோடு, ரெயில்வேயின் நற்பெயரையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். எனவே, இதுபோன்ற தகவல்களை வெளியிடும் முன்பு அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் மூலம் உண்மைகளை சரிபார்க்குமாறு தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.