சென்னை,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதன் மூலம் 59 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகளின் (தி.மு.க., அ.தி.மு.க.) ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தத் தேர்தலில் த.வெ.க.வுக்கு 34.02 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. அதாவது, 1 கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 பேர் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
அதேபோல், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க. 59 இடங்களில் வெற்றி பெற்று, 2-வது இடத்தை பிடித்துள்ளது. தி.மு.க.வுக்கு 24.19 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. அக்கட்சிக்கு 1 கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 பேர் ஓட்டு போட்டுள்ளனர்.
அதிர்ச்சி தகவல்
பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. 47 இடங்களை கைப்பற்றி 3-வது இடத்துக்கு பின்தங்கியது. அந்தக் கட்சிக்கு 21.21 சதவீதம் வாக்குகள் கிடைத்தன. அதாவது, 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 பேர் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.
பொதுவாக, தேர்தலில் நிற்கும் அரசியல் கட்சிகளுக்கு, அக்கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களை தாண்டி, எந்த கட்சியை சாராத பொதுமக்களும் வாக்களிப்பார்கள். ஆனால், தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அக்கட்சி தொண்டர்களே வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.வுக்கு 2 கோடி, அ.தி.மு.க.வுக்கு 1.90 கோடி உறுப்பினர்கள்
அதாவது, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம், தி.மு.க.வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 2 கோடியை எட்டியது என்று அக்கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், தேர்தலில் 1 கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 வாக்குகளே தி.மு.க.வுக்கு கிடைத்தது. இதைவைத்து பார்க்கும்போது, தி.மு.க. தொண்டர்கள் 80 லட்சம் பேர் அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை என தெரிகிறது.
இதேபோல், கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம், அ.தி.மு.க.வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 கோடியே 90 லட்சம் என்று அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. ஆனால், தேர்தலில் 1 கோடியே 4 லட்சத்து 62 ஆயிரத்து 146 பேர் அக்கட்சிக்கு வாக்களித்து உள்ளனர். இதைவைத்து பார்க்கும்போது, அ.தி.மு.க. தொண்டர்கள் 85 லட்சம் பேர் அக்கட்சிக்கு வாக்களிக்கவில்லை என தெரிகிறது.
இதனால், இப்போது இரு கட்சி தலைமைக்கும் புதிய சந்தேகம் ஒன்று எழுந்துள்ளது.
உறுப்பினர் சேர்க்கையில் சந்தேகம்
அதாவது, உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிடும்போது, முறைகேடாக உறுப்பினர்களை சேர்த்து, தவறான தகவலை கட்சித் தலைமைக்கு அளித்தார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எது எப்படியோ, இருபெறும் கட்சிகள், புதிய கட்சியான த.வெ.க.விடம் தோல்வியை தழுவியுள்ளன.