கோவை,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை பேருந்துகள் மூலம் சென்னைக்கு வரவழைத்து, அவர்களை த.வெ.க. தலைவர் விஜய் நாளை சந்திக்க உள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது சீமான் கூறியதாவது;-
பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது விஜய்யின் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றி நாம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. தொடர்ந்து அதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதை நான் அருவெறுப்பாக நினைக்கிறேன். அதைத் தாண்டி இங்கு அரசியல் இருக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இவ்வளவு காலம் யாராவது பேசிக் கொண்டிருந்தீர்களா? அது ஒரு அரசு படுகொலை. மக்களின் புரட்சியை சுட்டு ஒடுக்கினார்கள். அந்த சம்பவத்திற்கு அன்றைய அரசு பொறுப்பேற்றதா? பாதிக்கப்பட்டவரகளைப் பார்த்து ஊக்கத்தொகை கொடுத்தார்களா? வீட்டில் ஒருவருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னார்களா? உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை படிக்க வைப்போம் என்று சொன்னார்களா?
நாட்டையும், ஆட்சியையும் எதை நோக்கி நகர்த்துகிறார்கள்? கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களின் பிள்ளைகளை படிக்க வைப்பதாகவும், அரசு வேலை கொடுப்பதாகவும் கூறினார்கள். நாட்டின் பாதுகாப்பிற்காக எல்லையில் உயிர் தியாகம் செய்தவரின் குடும்பத்தை சென்று பார்த்தார்களா? பணம் கொடுத்தார்களா? குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுப்பதாக சொன்னார்களா?
ஒரு நடிகரை பார்ப்பதற்காக சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இத்தனை லட்சம் ரூபாய் பணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்பதாக சொல்கிறார்கள். விவசாயி நெல் வீணாகிறது என்று வீதியில் நின்று கண்ணீர் சிந்துகிறான். யாருடைய பசிக்காக விவசாயி உழைக்கிறான்? அதைப் பற்றி கவலைப்படாமல், எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகிய எல்லோரும் ரசிகர்களை சென்று சந்தித்தார்கள். நான் எந்த ரசிகரையாவது சந்தித்தேனா? நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வெளிவரவில்லை, சிறையில் இருந்து வெளிவந்தேன். ஒருவர் கூட ரசிகராக என் கட்சியில் வந்து சேரவில்லை. இனச்சாவில் பிதுக்கி பிரசவிக்கப்பட்ட மகன் நான். இதில் ஒப்பீடுகள் இருக்கக் கூடாது.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.