ஆவடி,
கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து சென்னைக்கு மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது ரெயில் பெட்டியில் ஜெனரேட்டர் இயக்குவதற்காக நிரப்பி வைக்கப்பட்டிருந்த டீசல் பெட்டியில் இருந்து டீசல் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர், ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
அதிகாரிகள் அறிவுரையின்படி ரெயிலை ஆவடி ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் காலை 8 மணிக்கு வந்து நிறுத்தினார். பின்னர் ஒலிபெருக்கி மூலம் ரெயிலில் இருந்த பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி ஆவடியில் இருந்து சென்னை சென்டிரல் சென்ற புறநகர் மின்சார ரெயிலில் ஏறிச் சென்றனர். காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என மின்சார ரெயிலில் கூட்டம் அலைமோதியது. இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
பின்னர் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து டீசல் கசிவு ஏற்பட்ட பெட்டியில் இருந்து டீசலை பைப் மூலமாக பேரல்களில் நிரப்பினர். அதன் பின்னர் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 10.50 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.