திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரை வாட்ஸ்அப் வீடியோ காலில் (Whatsapp Video Call) தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டு, முதியவரின் ஆதார் அட்டை மற்றும் சிம் கார்டு விபரங்களை பயன்படுத்தி சட்டவிரோத செயல் நடைபெற்றுள்ளதாகவும், அதற்காக வழக்குப்பதிவு செய்யபட்டிருப்பதாக கூறி, அதற்கான ஆதாரங்களை போலியாக தயார் செய்து FIR Copy, Arrest Warrant போன்ற ஆவணங்களை முதியவருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி டிஜிட்டல் கைது (Digital Arrest) செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப சொல்லி அந்த மர்ம நபர் மிரட்டியதன் பேரில் அந்த முதியவர் தன்னுடைய வங்கியில் இருந்து ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை RTGS மூலம் அனுப்பி இழந்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து அந்த முதியவர், மோசடியில் ஈடுபட்டு பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தருமாறு திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் இது போன்ற சைபர் மோசடிக்காரர்கள் டிஜிட்டல் கைது (Digital Arrest) என்று அதிகமாக ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்கள் போன் மூலம் தொடர்பு கொண்டு தங்களின் ஆதார் கார்டு விபரங்களை பயன்படுத்தி FedEx Courier மூலம் போதைப்பொருள் அல்லது சட்டவிரோத பொருட்கள் வெளிநாட்டிற்கு பார்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அல்லது தங்களது ஆதார்கார்டை பயன்படுத்தி போலி வங்கிகணக்கை உருவாக்கி அதில் சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும், அது சம்பந்தமாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்குப்பதிவு செய்யபட்டிருப்பதாக கூறி அதற்கான ஆதாரங்களை போலியாக தயார் செய்து போலீசார் பேசுவது போன்ற வீடியோ காலில் தொடர்பு கொண்டு அவர்களை Digital Arrest செய்திருப்பதாகவும், இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள் வங்கி விபரங்கள் மற்றும் அவர்களிடம் இருக்கும் பணத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்ப சொல்லி ஆன்லைனில் பணம் பறிக்கும் மோசடி நடந்து வருகிறது. இதனை நம்பி விவரங்களைத் கொடுப்பவர்களுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது.
மேலும் இதுபோன்ற சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக புகார்களை பதிவு செய்யலாம் எனவும் இதுமாதிரியான மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் விழிப்புடன் இருக்குமாறு திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு அறிறுத்தப்படுகிறது.