தமிழக செய்திகள்

அரசு பேருந்தில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து டிஜிட்டல் போர்டு: 5 பேர் சஸ்பெண்ட்

திமுக குறித்து அரசு பேருந்து ஒன்றில், ஓம்சக்தி பராசக்தி. தி.மு.க. ஒரு தீயசக்தி என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

கடலூர்,

அரசு பேருந்தில் மு.க.ஸ்டாலினை விமர்சித்து டிஜிட்டல் போர்டு விவகாரத்தில் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து கடலூர், விருத்தாசலம், பெரம்பலூர் வழியாக திருச்சிக்கு தினசரி அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சம்பவத்தன்று விருத்தாசலத்தில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டது. செல்லும் வழியில், பஸ்சின் பின்பக்க எல்.இ.டி. பெயர் பலகையில் தி.மு.க. குறித்த அவதூறு வாசகங்கள் வெளியானது.அதில், ஓம்சக்தி பராசக்தி. தி.மு.க. ஒரு தீயசக்தி என்பன உள்பட பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை பஸ்சின் பின்னால் சென்ற ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கடலூர் அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், விருத்தாசலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ்சின் வழித்தட எல்.இ.டி.பெயர் பலகையில் தி.மு.க. குறித்த அவதூறு வாசகங்கள் பதிவிடப்பட்டது குறித்து அந்த பஸ்சின் கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பெயர் பலகைக்கு செல்லக்கூடிய ஒயர் துண்டிக்கப்பட்டிருந்ததால், அதனை பயன்படுத்தி யாரோ சிலர், அவதூறான வாசகங்களை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. இதில் பணிமனை ஊழியர்கள் யாரேனும் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்தநிலையில், அரசுப் பேருந்தில் திமுக மற்றும் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து டிஜிட்டல் போர்டு வைத்த விவகாரத்தில் 5 ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுநர்கள் சித்திரைச்செல்வன், பரந்தாமன், நடத்துநர்கள் செந்தாமரை கண்ணன், வெங்கடேசன், மணிகண்டன் ஆகியோர் மீது விழுப்புரம் போக்குவரத்துக்கழக பணிமனை இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT