சென்னை,
டிஜிட்டல் இந்தியா... வெறும் புளுகு மூட்டை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மத்திய பா.ஜ.க அரசின் மவுனம் எதைக் காட்டுகிறது? 'டிஜிட்டல் இந்தியா' என மேடைக்கு மேடை முழங்கும் மத்திய அரசே, உங்கள் மவுனத்தின் நிழலில் இன்று கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ஒரு மாபெரும் தேர்வு மோசடி மாபியா உருவாகியுள்ளது.
கல்வி முறையை டிஜிட்டல் ஆக்குவதற்குப் பதிலாக, இந்தத் தேர்வு மோசடித் தொழிற்சாலையைத் தான் நீங்கள் டிஜிட்டல் மயமாக்கி மாபெரும் சாம்ராக்ஷியமாக வளர்த்துள்ளீர்கள்!
- 2015-க்குப் பிந்தைய காலகட்டத்தில் தேர்வு மோசடிகளில் கேள்வித்தாள் கசிவு மட்டும் 70% ஆக விண்ணைத் தொட்டு நிற்கிறது.
- இதயமற்ற இந்த முறைகேடுகளாலும், தேர்வுகள் ரத்து மற்றும் மறுதேர்வு அறிவிப்புகளாலும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி, நாடு முழுவதும் பல அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர்! இது வெறும் பேப்பர் லீக் அல்ல, இளைஞர்களின் உயிரோடு விளையாடும் கொலைக் களம்!
- எல்லையப் பாதுகாக்க வேண்டிய ராணுவப் படைகளை இன்று கேள்வித்தாள்களைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு இந்த ஆட்சியில் கல்வித் துறை தள்ளப்பட்டுள்ளது!
- 'குஜராத் மாடல்', 'டபுள் இன்ஜின்' என மார்தட்டும் குஜராத்தில் 2015-க்கு முன் பூஜ்யமாக இருந்த மோசடி வழக்குகள், இன்று 13 வழக்குகளாகப் பெருகியுள்ளன.
- தேசிய அளவில் வழக்குகள் 27 ஆக அதிகரித்துள்ளது.
- பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் 60, கூட்டணிக் கட்சிகளின் மாநிலங்களில் 39 என மொத்தம் 100-க்கும் மேற்பட்ட மோசடிகள்!
பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த கோச்சிங் சென்டர்களாலும், இந்த மோசடி நெக்ஸஸ்ஸாலும் கல்வித் துறை அதிகாரிகளும் முதலாளிகளும் மட்டுமே கோடிகளைக் குவிக்கிறார்கள்; மாணவர்களுக்கு மிஞ்சுவது மரணமும் ஏமாற்றமும் மட்டுமே!
நீங்கள் நடத்துவது அரசாங்கமா, இல்லை 'கேள்வித்தாள் ஆலோசனை மையமா'?
இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.