திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர், திருக்கார்த்திகை திருநாளையொட்டி தீபம் ஏற்றியபோது எதிர்பாராதவிதமாக புடவையில் தீப்பற்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் நகரப் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி (வயது 80). இவரது மகன் சென்னையில் வசித்து வரும் நிலையில், மூதாட்டி மீனாட்சி மட்டும் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு, இரவு நேரத்தில் மூதாட்டி தனது வீட்டில் விளக்கேற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது புடவையில் தீப்பற்றியுள்ளது.
வீட்டில் வேறு யாரும் உடனில்லாத காரணத்தால், தீயை அணைக்கவோ அல்லது உதவிக்கு யாரையும் அழைக்கவோ முடியாமல் மூதாட்டி தவித்துள்ளார். தீ மளமளவெனப் பரவியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை வழக்கம்போல் வீட்டு வேலைக்கு வந்த பணிப்பெண், வீட்டிற்குள் மூதாட்டி மீனாட்சி உடல் கருகிய நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் சென்னையில் உள்ள அவரது மகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மகன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.