திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழுதடைந்த நிலையில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று திடீரென இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்த புலியூர்நத்தம் கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று செயல்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், ஏற்கனவே பலவீனமடைந்து பழுதடைந்த நிலையில் இருந்த இந்த தண்ணீர் தொட்டி, மழையின் தாக்கம் காரணமாக இன்று (சனிக்கிழமை) பிற்பகலில் திடீரென ஒட்டுமொத்தமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.
தொட்டி இடிந்து விழுந்த சமயத்தில், அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடவில்லை. இதனால் மிகப்பெரிய உயிர்ச்சேதமும், அசம்பாவிதமும் நூலிழையில் தவிர்க்கப்பட்டது.
சுமார் பல அடி உயரமுள்ள தண்ணீர் தொட்டி, கண்ணிமைக்கும் நேரத்தில் அப்படியே சரிந்து கீழே விழும் நொடிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாக பதிவாகியுள்ளது. இந்த திக் திக் காட்சிகள் செய்தி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு புதிய குடிநீர் தொட்டி அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.