தமிழக செய்திகள்

5 அரசு ஐ.டி.ஐ.-களில் ஜூன் 30-ந்தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம், வேப்பலோடை, திருச்செந்தூர், உமறுப்புலவர் நாகலாபுரம், ஏரல் ஆகிய 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை ஜூன் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

5 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி (கோரம்பள்ளம்), வேப்பலோடை, திருச்செந்தூர், உமறுப்புலவர் நாகலாபுரம் மற்றும் ஏரல் ஆகிய 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தகுதியான மாணவர்கள் நேரடியாகச் சென்று சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம். மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் (Trades) குறித்த விபரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம்.

கல்வித்தகுதியும் விண்ணப்பக் கட்டணமும்:

இந்த ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் 9-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரடிச் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயை அட்மிஷனின் போது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ (UPI - Gpay, PhonePe) வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.

தேவையான அசல் சான்றிதழ்கள்:

நேரடிச் சேர்க்கைக்கு விரும்பும் மாணவர்கள் தங்களின் 8 அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றின் அசல் (Original) மற்றும் ஒரு செட் நகல்களுடன் (Xerox) மேலே குறிப்பிட்ட ஐ.டி.ஐ. மையங்களை நேரில் அணுக வேண்டும்.

தொடர்பு எண்கள்:

தூத்துக்குடி (9499055810), வேப்பலோடை (9499055814), திருச்செந்தூர் (9499055812), நாகலாபுரம் (04638-242687), ஏரல் (7418165115).

அரசு வழங்கும் சலுகைகள்:

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு விலையில்லா நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மாதந்தோறும் வருகை நாட்களுக்கு ஏற்ப ரூ.750 உதவித்தொகை. 3 வேளையும் இலவச உணவு மற்றும் தங்குவதற்கான உறைவிட வசதி. விலையில்லா லேப்டாப் (மடிக்கணினி), மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள். கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை (Bus Pass). தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் 'புதுமைப் பெண் திட்டம்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்' கீழ் மாதந்தோறும் தலா ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன.

மாணவர்களின் எதிர்காலத்தை வளர்க்கும் இந்த அரிய வாய்ப்பினைத் தகுதியுள்ள உள்ளூர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.