தமிழக செய்திகள்

இயக்குனர் பாக்யராஜ் மாரடைப்பால் மரணம்: அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சென்னை,

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முக திறமையால் பளிச்சிட்டவர் பாக்யராஜ்.

திரைக்கதை மன்னன்

ரசிகர்களின் மனநிலையை சரியாக புரிந்து, சாதாரண குடும்ப வாழ்க்கையை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றிய படைப்பாளி பாக்யராஜ், 'திரைக்கதை மன்னன்' என்று திரையுலகில் கொண்டாடப்பட்டார்.

ஒரு கை ஓசை, மவுன கீதங்கள், இன்று போய் நாளை வா உள்பட தமிழ் சினிமாவில் நின்று பேசும் பல படைப்புகளை வழங்கியவர் பாக்யராஜ். சமீபத்தில் திரையுலகில் தனது பொன்விழாவை கொண்டாடினார்.

திரைக்கதை பயிற்சி வகுப்புகள்

பாக்யராஜின் மனைவி பூர்ணிமாவும் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் ஆவார். இவர்களுக்கு சரண்யா என்ற மகளும், சாந்தனு என்ற மகனும் உள்ளனர். இதில் சரண்யா 'பாரிஜாதம்' என்ற படத்தில் நடித்தார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார். மகன் சாந்தனு நடிகராக இருக்கிறார். சாந்தனுவின் மனைவி கிகி நடிகையும், நடன கலைஞரும் ஆவார்.

முக்கியமான பட விழாக்களிலும், திரைக்கதை பயிற்சி வகுப்புகளிலும் தவறாமல் பங்கெடுத்து வந்த பாக்யராஜ், சமீபத்தில் கோவாவில் நடந்த நடிகை குஷ்பு மகள் அவந்திகா திருமண விழாவுக்கு சென்று மணமக்களை வாழ்த்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு நீண்ட நேரம் எழுத்தாளர்கள் சங்கதேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார்.

மாரடைப்பால் மரணம்

நீண்ட நேரம் கழித்து உறங்க சென்ற பாக்யராஜ், நேற்று அதிகாலை எழுந்து நடைபயிற்சி முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வந்த செல்போன் அழைப்பை ஏற்று பேசிக்கொண்டிருந்த பாக்யராஜ் திடீரென மாரடைப்பு ஏற்பட, அப்படியே மயங்கி சரிந்தார். அதனைத்தொடர்ந்து அவர் அருகேயுள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாக்யராஜின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 73.

முதல்-அமைச்சர் விஜய் அஞ்சலி

அதன்பின்னர் பாக்யராஜின் உடல், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பாக்யராஜின் உடல் அருகே அழுகையும், சோகமுமாக அமர்ந்திருந்த மனைவி பூர்ணிமா அருகே சென்று அமர்ந்து, அவரின் கைகளை பற்றி ஆறுதல் கூறினார். பின்னர் பாக்யராஜின் மகன் சாந்தனுவை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். மகள் சரண்யா, மருமகள் கிகி உள்ளிட்டோருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மு.க.ஸ்டாலின் அஞ்சலி

பாக்யராஜ் உடலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பாக்யராஜின் உறவினர்களுக்கு ஆறுதலும் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்.

திரையுலகினர் அஞ்சலி

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார். சிவகார்த்திகேயன், ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், சத்யராஜ், சரத்குமார், ராதாரவி, பார்த்திபன், மோகன், சமுத்திரக்கனி, கவுண்டமணி உள்பட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சங்கத்தலைவர் நாசர் உள்ளிட்ட நிர்வாகிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

பாக்யராஜின் உடல் இன்று தகனம்

பாக்யராஜின் உடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் அவரது உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பெசன்ட்நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு, அதன்பின்னர் தகனம் செய்யப்படும் என்று பாக்யராஜின் குடும்பத்தினர் சார்பில் இயக்குனர் பார்த்திபன் தெரிவித்தார்.