தமிழக செய்திகள்

‘இயக்குநர் பாக்கியராஜ் ஒரு தேசியவாதி’ - தமிழிசை சவுந்தரராஜன்

நல்ல மனிதர்களை இறைவன் சீக்கிரம் எடுத்துக் கொள்கிறாரோ என்ற எண்ணம் வருகிறது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் (73) திடீர் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான திரைக்கதை, வசனம் மற்றும் நகைச்சுவை மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்து புகழ்பெற்றவர்.

பாக்யராஜின் இந்த திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாக்கியராஜின் மறைவு குறித்து பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

“சகோதரர் பாக்கியராஜ் மறைந்துவிட்டார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. அவர் நல்ல தேசிய கருத்துகளை கொண்டவர். தமிழ் மீது அக்கறை கொண்டவர். எனக்கு அவரை நடிப்பவராக தெரிந்ததை விட, படிப்பவராகத்தான் தெரியும்.

எனக்கு சிறுவயது முதல் அவரது ‘பாக்யா’ புத்தகத்தை படித்து பழக்கம். அதில் நிறைய கருத்துகள் இடம்பெற்றிருக்கும். அனைத்திற்கும் மேலாக, அரசியல் ரீதியாக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக இருந்தவர். எம்.ஜி.ஆரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர். பாக்கியராஜ் ஒரு அரசியல்வாதியாக பரிணமிப்பார் என்ற எண்ணம் கூட அந்த காலத்தில் இருந்தது.

பண்முகத்தன்மை கொண்டவர். மேலும், அவர் ஒரு தேசியவாதி. கட்சி சாராத தேசிய நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்திருக்கிறோம். அதை ஏற்று அவர் வந்திருக்கிறார். நல்ல நடிகர், நல்ல இயக்குநர், நல்ல எழுத்தாளர், எல்லாவற்றுக்கும் மேல் ஒரு நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் அவரது மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு, மகள் சரண்யா ஆகியோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்ல மனிதர்களை இறைவன் சீக்கிரம் எடுத்துக் கொள்கிறாரோ என்ற எண்ணம் வருகிறது. இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் அவரது குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும். நல்ல மனிதராக வாழ்ந்து, மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக பாக்கியராஜ் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.