தமிழக செய்திகள்

மதுரையில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற நிலை குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் ஆய்வு..!

இந்தப் ஆய்வின் ஒரு பகுதியாக, குறைதீர்க்கும் கூட்டத்தையும் படைத்தலைவர் நடத்தினார்.

சென்னை,

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் தென் மண்டல சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற நிலை குறித்து மதுரையில் ஆய்வு செய்தார்.

குற்ற நிலைமை குறித்து ஆய்வு

இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் மகேஷ் குமார் (IPS)., மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற நிலைமை குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தென் மண்டல காவல்துறைத் தலைவர் (IGP), மதுரை மாநகரம் மற்றும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர்கள், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் சரகங்களின் துணை காவல்துறைத் தலைவர்கள் (DIGs), தென் மண்டலத்தைச் சேர்ந்த 10 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் (SPs), மதுரை மாநகர துணை காவல் ஆணையர்கள் (DCPs) மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் (ASPs) ஆகியோர் கலந்து கொண்டனர்.

படைத்தலைவர், சட்டம் ஒழுங்கை திறம்பட பராமரித்தல், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தினார். குறிப்பாக, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் (History-Sheeters) மீது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் வழக்குகளைக் கூர்ந்து கண்காணிக்கவும், தேவையான சந்தர்ப்பங்களில் பிணை ரத்து நடவடிக்கைகளை (Bail Cancellation) திறம்பட மேற்கொள்ளவும், காவல் நிலைய அளவில் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

தலைமை இயக்குநர் வலியுறுத்தல்

பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவதுடன், சமூகத்தின் தீவிர பங்களிப்புடன் போதைப்பொருள் இல்லாத கிராமங்கள் (Drug-Free Villages) உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும், தொடர்ந்து அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்.

இந்தப் ஆய்வின் ஒரு பகுதியாக, குறைதீர்க்கும் கூட்டத்தையும் படைத்தலைவர் நடத்தினார். இதில் தென் மண்டலம் மற்றும் மதுரை மாநகரத்தைச் சேர்ந்த 65 காவல் ஆளிநர்கள் தங்களது மனுக்களை சமர்ப்பித்தனர். அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கைக்காக ஆய்வு செய்யப்பட்டன.

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் சுமூகமாக நடைபெற உரிய பாதுகாப்பு வழங்கியதற்கு, படைத்தலைவர் அவர்கள் பாராட்டு தெரிவித்தார். மேலும், சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆளிநர்களை பாராட்டும் வகையில், படைத்தலைவர் 62 காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு வெகுமதிகளை வழங்கினார். திறம்பட காவல் பணியை மேற்கொள்வதில் அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை அவர் வெகுவாக பாராட்டினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT