தமிழக செய்திகள்

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண்ணை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம்

புதுக்கோட்டை அருகே பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணை அங்கே காரில் வந்த 2 பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் சாலையில் தள்ளிவிட்டு சென்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 35 வயது பெண் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். திருமணமாகாத இவர் 10 கி.மீ. தூரத்தில் உள்ள மற்றொரு கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை அவர் வேலை முடித்து, அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேர் அந்த பெண் தனியாக நிற்பதை பார்த்து காரை நிறுத்தி அவரை ஊரில் இறக்கி விடுவதாக கூறி அழைத்துள்ளனர். அவர் மறுக்கவே கட்டாயப்படுத்தி காரில் ஏற்றினர்.

பின்னர் சற்று தொலைவில் உள்ள குளக்கரை அருகே மறைவான இடத்திற்கு சென்று அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை காரில் அழைத்து சென்று, கறம்பக்குடி-ஆலங்குடி சாலையில் தள்ளிவிட்டு சென்று விட்டனர்.

மயக்கம் தெளிந்து அந்த பெண் அழுது சத்தம் போட்டுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண்ணை மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கார் உரிமையாளரும், டிரைவருமான சேகர் (வயது 53), அவரது நண்பர் கூலித்தொழிலாளி மாரிமுத்து(52) ஆகிய 2 பேரும் கடத்தி சென்று பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதில் உடனடியாக மாரிமுத்துவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கார் டிரைவர் சேகரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண் புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.