சென்னை,
மீனவர் மழைக்கால நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சி மீனவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் செய்யது அஹமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மீன்பிடிக்க முடியாத பருவமழைக்காலங்களில், கடல் சீற்றம் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாகத் தொழில் முடங்கி, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கடலோர மீனவச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், 'மீனவர் சேமிப்பு மற்றும் மழைக்கால நிவாரணத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்குப் பத்து நாட்களுக்கு முன்பாகவே நிவாரணத் தொகை மீனவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையிலும், அந்த நிதி இதுவரை வழங்கப்படவில்லை எனக் கடலோரப் பகுதி மீனவ மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும் வேதனையுடனும் குற்றம்சாட்டுகின்றனர்.
வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவான புயல்கள், கடல் கொந்தளிப்பு மற்றும் வானிலை எச்சரிக்கை காரணமாக மீன்பிடித் தொழில் முடங்கிய நிலையிலும், தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையிலும் அரசின் நிவாரணத் தொகை இன்னும் அவர்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை. தமிழக அரசின் இந்தத் தாமதம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் முடக்கும் வகையில் அமைந்துள்ளதால், மீனவர் சேமிப்பு நிவாரணத் தொகை ரூ. 4,500 மற்றும் பருவமழைக்கால சிறப்பு உதவித்தொகை ரூ. 7,000 ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தம் ரூ. 11,500-ஐ உடனடியாக விடுவிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கியப் பங்காற்றும் மீனவ மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை உணர்ந்து, பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டுகளைப் போல மீனவர்களின் வங்கிக் கணக்குகளில் இத்தொகையைப் போர்க்கால அடிப்படையில் விரைந்து வரவு வைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.