தமிழக செய்திகள்

நெதர்லாந்து ஒப்படைத்த செப்பேடுகளை நாகையில் காட்சிப்படுத்துக - வைகோ

ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை பிரதமரிடம் நெதர்லாந்து ஒப்படைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழர் கால செப்பேடுகள், ஆனைமங்கலச் செப்பேடுகள் எனவும், Leiden Copper Plates எனவும் அழைக்கப்படுகின்றன. இந்தச் செப்பேடுகள், சோழ வரலாறு குறித்த முக்கியமான ஆவணமாகக் கருதப்படுகின்றன.

இந்தச் செப்பேடுகள் இரண்டு காலகட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 21 ஏடுகளைக் கொண்ட முதல் தொகுதி இராஜேந்திரச் சோழனால் வழங்கப்பட்டது. 3 ஏடுகளைக் கொண்ட இரண்டாவது தொகுதி இராஜேந்திரச் சோழனின் பேரனான குலோத்துங்கச் சோழனால் (1070-1120) வழங்கப்பட்டது.

இராஜேந்திரச் சோழன் வழங்கிய 21 செப்பேடுகளும் ஒரு மிகப் பெரிய வளையத்தினால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வளையம் இராஜேந்திரச் சோழனின் முத்திரையால் இணைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல, குலோத்துங்கனால் வழங்கப்பட்ட சிறிய செப்பேட்டுத் தொகுதியும் ஒரு வளையத்தால் இணைக்கப்பட்டுள்ளது.

இராஜேந்திரச் சோழன் வழங்கிய செப்பேடுகளில் ஐந்து செப்பேடுகள் சமஸ்கிருதத்திலும், 16 செப்பேடுகள் தமிழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்தில் உள்ள பகுதி, சோழ மன்னர்களின் பரம்பரையைச் சொல்கிறது. தமிழில் உள்ள பகுதி இராஜேந்திரச் சோழனின் தந்தையான இராஜராஜ சோழனின் சில சாதனைகளைச் சொல்கிறது. பிறகு, ராஜராஜ சோழனின் 21ஆவது ஆட்சிக் காலத்தில் ஸ்ரீ விஜயநாட்டு மன்னனான மாற விஜயதுங்க வர்மன், தன் தந்தையின் பெயரால் நாகப்பட்டினத்தில் கட்டிய சூடாமணி பன்ம விகாரத்திற்கு ஆனைமங்கலத்தைச் சுற்றியுள்ள 26 கிராமங்களைத் தானமாகக் கொடுத்திருந்தான்.

அந்த தானத்தை இந்தச் செப்பேடுகள் மூலம் இராஜேந்திரச் சோழன் தாமிரசாசனம் செய்தான். முதலாம் குலோத்துங்கச் சோழன் வழங்கிய செப்பேடு, அந்த பௌத்த விகாரைக்கு அளிக்கப்பட்ட தானத்தை அவன் காலத்தில் உறுதிசெய்யவும் மேலும் விரிவாக்கிய தானத்தை அளிக்கவும் எழுதப்பட்டிருக்கின்றன.

வரலாற்று ஆசிரியர்கள் இந்தச் செப்பேடுகளை வெறும் நிர்வாக ஆவணங்களாகக் கருதவில்லை. மத்தியகால தென்னிந்தியாவில் தமிழ்நாட்டின் பன்முகப் பண்பாடு மற்றும் வணிகத் தொடர்புகள் நிறைந்த உலகின் முக்கிய தடயங்களாக இவை திகழ்ந்தன என்று விவரிக்கின்றனர்

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த விகாரையின் இடிபாடுகள் நாகப்பட்டினத்தில் இருந்தன. 1867இல் விகாரை முழுவதுமாக இடித்துத்தள்ளப்பட்டது. டச்சு கிழக்கிந்தியக் கம்பனி மூலம் இந்தியாவுக்கு வந்த நெதர்லாந்து நாட்டினர் சோழ மண்டலக் கடற்கரையில் பழவேற்காடு, சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட சில இடங்களில் சுமார் 200 ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தினர்.

டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி, 1690 இல் தனது கோரமண்டல் தலைமையகத்தை பழவேற்காடிலிருந்து நாகப்பட்டினத்திற்கு மாற்றியது. அப்போது இந்தப் பட்டயங்கள் ஐரோப்பியரின் கைகளுக்குச் சென்றன. 18 ஆம் நூற்றாண்டில், டச்சு காலனித்துவ ஆட்சியின் போது, கோரமண்டல் கடற்கரைப் பகுதியிலிருந்து ஆணைமங்கலம் செப்புப் பட்டயங்கள் நெதர்லாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. நாகப்பட்டினம் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த காலகட்டத்தில் இந்த இரண்டு செப்பேட்டுத் தொகுதிகளும் ப்ளோரன்சியஸ் கேம்பர் என்பவரால் நெதர்லாந்திற்குக் கொண்டுவரப்பட்டன.

இவரது வழிவந்தவர்களின் வசம் இந்த செப்பேட்டுத் தொகுதிகள் இருந்த நிலையில், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஹமேக்கர் குடும்பத்தினருடன் திருமணம் செய்துகொள்ள, செப்பேடுகள் ஹமேக்கர் குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்தன. முடிவாக, 1862இல் பேராசிரியர் எச்.ஏ. ஹாமேக்கர் (1789 - 1835) குடும்பத்தினரால், லெய்டன் அருங்காட்சியகத்திற்கு இந்தச் செப்பேடுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர் ஹென்ட்ரிக் ஆரண்ட் ஹாமேக்கரின் சொத்துக்கள் வழியாக இவை லெய்டன் பல்கலைக்கழக சேகரிப்பில் சேர்க்கப்பட்டு அங்கேயே பாதுகாக்கப்பட்டன.

பல ஆண்டுகளாக, ஆனைமங்கலம் செப்பேடுகளை ஒப்படைக்கக் கோரி நெதர்லாந்து நாட்டை இந்திய அரசு வலியுறுத்தி வந்தது. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை' பல ஆண்டு கால தூதரக முயற்சிகளுக்கு பிறகு நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

தற்போது நெதர்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி அவர்களிடம் நெதர்லாந்து அரசு ஒப்படைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை நாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்து பொது மக்களுக்கு காட்சிப்படுத்த மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.