த.வெ.க. புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக இருக்கும் டாக்டர் சி.விஜயபாஸ்கர், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2021-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. அப்போது டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரது மனைவி ரம்யா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மத்திய அரசின் விசாரணை முகமையான அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியது.அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினார்கள்.
இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் டாக்டர் விஜயபாஸ்கர் மீதும், அவரது மனைவி ரம்யா மீதும் குற்றப்பத்திரிக்கையை புதுக்கோட்டை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை தனியாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் டாக்டர் விஜயபாஸ்கருக்கும், அவருடைய மனைவி ரம்யாவுக்கும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
அந்த சம்மன் அடிப்படையில், டாக்டர் விஜயபாஸ்கர் மட்டும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். காலை 11 மணியில் இருந்து இரவு 7 மணி வரை, 8 மணிநேரம் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகவேண்டும் என்ற நிபந்தனையுடன் டாக்டர் சி.விஜயபாஸ்கரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதையடுத்து விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.